ADD THE SLIDER CODE HERE

Pages

Saturday, March 24, 2012

Spartacus - அடிமைகளின் பிரதிநிதி

“You don’t have to be a nice person to be extremely talented. You can be a shit and be talented, and, conversely, you can be the nicest guy in the world and not have any talent. Stanley Kubrick is a talented shit.”

தலைவரை இப்படி அசிங்கபடுதியது யார் என்று பின்னால் பார்போம்.

நீண்ட நாட்களாகவே இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துகொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் புத்தக கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் தான் ஸ்பார்டகஸ் நாவலை அறிமுகபடுத்தினார். கடந்த 60 ஆண்டுகளில் உலகின் 100 மொழிகளுக்கும் மேல் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. இந்த நாவலை தான் குப்ரிக் படமாக எடுத்திருக்கிறார். நாவல் படித்துவிட்டு படத்தையும் பார்த்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் தமிழில் ஒரு வெங்காயம் அந்த நாவலை படு மொக்கையாக மொழிபெயர்த்து படிக்கவிடாமல் கடுபேற்றிவிட்டார்.

உலகின் மிகபெரிய ஏகாதிபத்திய பகுதியாக விளங்கிய ரோம பேரரசின் அடித்தளத்தை கொஞ்சம் அசைத்து பார்த்த ஸ்பார்டகஸ் பற்றிய கதை. கார்ல் மார்க்ஸ் இவரை "பண்டையகால வரலாற்றில் பாட்டாளி வர்கதிற்காக பாடுபட்ட மிகச்சிறந்த வீரன்" என்று வர்ணிக்கிறார். அடிமைகளுள் ஒருவனாக வாழும் ஸ்பார்டகஸ், தன் நண்பன் ஒருவன் கொல்லப்பட்டதும் கோபம் கொண்டு எழுபது அடிமைகளுடன் தப்பிக்கிறான். பின் ரோமாபுரத்தில் வாழும் பல அடிமைகளை விடுவித்து அவர்களோடு சேர்ந்து வலிமையான ரோம பேரரசிற்கு எதிராக போராடுகிறான். அவன் வெற்றி பெற்றானா, அடிமைகள் சுதந்திரம் பெற்றார்களா என்பது வரலாறு.படம் உருவான பின்னணி:

படத்தின் ஸ்பார்டகஸ் ஆக நடித்திருப்பது Kirk Douglas. இவர்தான் குப்ரிக்கை மேல குறிப்பிட்டவாறு திட்டியது.1951 ல் Howard Fast எழுதிய Spartacus நாவலை தயாரித்து நடிக்க முடிவு செய்தார் Kirk Douglas. முதலில் Antony Mann என்பவரை இயக்குனராக போட்டு படத்தின் சில காட்சிகளை எடுத்த டக்ளசுக்கு அது பிடிக்காமல் போகவே Mann னை மாற்றி விட்டு குப்ரிக்கை இயக்குனராக அமர்த்தினார். அதுவும் 24 மணிநேரத்திற்குள் வேலைக்கு சேரவேண்டும் என்ற நிபந்தனையுடன். ஏற்கனவே Paths of Glory படத்தில் குப்ரிக் இயக்கத்தில் நடித்த டக்லஸ் அவருடன் கடும் மோதலில் இருந்தார். படத்தின் ஸ்க்ரிப்டை தன்னை கேட்காமல் மாற்றியதற்காக குப்ரிக்கை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். அப்போது குப்ரிக் வளரும் இயக்குனர் என்பதால் அவரால் எதிர்த்து எதுவும் பேசி இருக்க முடியாது. இருந்தும் ஸ்பார்டகஸ் படத்தை இயக்கும் திறன் அன்று குப்ரிக்கை விட்டால் யாருக்கும் கிடையாது என்று டக்லஸ் தெரிந்து வைத்திருந்தார். ஸ்கிரிப்ட்ல கைய வெச்ச மொத டெட்பாடி நீதாண்டா என்று சொன்ன பிறகே படத்தை இயக்கவிட்டிருக்கிறார் போல. தனது படங்களை பற்றி பின்னாளில் பேசிய குப்ரிக் "எனது கன்ட்ரோலில் இல்லாத ஒரே திரைப்படம் ஸ்பார்டகஸ் தான். அந்த படம் இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டும். ஆனால் திரைகதையை மாற்ற டக்லஸ் என்னை அனுமதிக்கவில்லை" என்று புலம்பினார்.[ என்னா கெத்து :) ]


இவருடன் மட்டும் அல்ல. படத்தின் ஒளிபதிவாளர் ரஸ்ஸல் உடனும் குப்ரிக் மோதலில் ஈடுபட்டுள்ளார். படத்தின் ஷாட்களை இவர்தான் நிர்ணயிப்பார். இந்த படம் இயக்கும் போது குப்ரிக் பார்பதற்கு சின்ன பையன் போல இருப்பார். ஆனால் வயது 30. ஒரு பொடியன் யார் என் ஷாட்களை தீர்மானிக்க என்று ரஸ்ஸல் கொதித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி கொள்வதாக ரஸ்ஸல் அறிவிக்க பல சமாதானங்களுக்கு பின் மீண்டும் ஒளிபதிவு செய்ய வந்தார். ஆனால் இவையெல்லாம் குப்ரிக்கை மாற்றவில்லை. Photography, Lens, Lighting என்று எல்லாவற்றிலும் மேதாவியாக விளங்கிய குப்ரிக் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். இது அவர் குணம். தனது கடைசி படம் வரை ஒளிப்பதிவு அவர் சொல்லும்படி, இல்லை கட்டளை இட்டபடி தான் இருந்தது. கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், இந்த படத்திற்காக ரஸ்ஸல் ஆஸ்கார் விருது பெற்றார். குப்ரிக் தயவால்.

Kirk Douglas - நிஜத்திலும் போராளி:

நிஜ வாழ்விலும் மக்களுக்காக போராடும் ஸ்பார்டகஸ் தான் Kirk Douglas. இந்த படத்தின் திரைக்கதை எழுதியவர் Trumbo. இவர் ஹாலிவுட் Black list ல் இடம் பெற்றவர். அதாவது கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் Black List இல் சேர்க்கப்பட்டு ஹாலிவுட்ல் பணிபுரிய விடாமல் தடுக்கப்பட்டனர்.அப்படி இவர்கள் ஏதேனும் ஒரு படத்தில் ரகசியமாக பணி புரிந்தாலும், இவர்களின் பெயர் படத்தில் குறிப்பிடபடாது. பல ஆண்டுகளாக நிலவி வந்த இந்த அநீதியை ஸ்பார்டகஸ் படத்தில் Trumbo வின் பெயரை தைரியமாக வெளியிட்டு Black List க்கு முடிவு கட்டினார் Douglas. இதற்காக 1988 ஆம் ஆண்டு, American Civil Liberties Union இவருக்கு மரியாதை செலுத்தி கௌரவித்தது. மேலும் தன் வாழ்வில் இருபது நாடுகளுக்கு மேல் பயணித்து மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஜனநாயகத்தின் அவசியத்தை பற்றி பேசி உள்ளார். அமைதிக்கான ஜனாதிபதி விருதும் இவருக்கு அளிக்கபட்டிருக்கிறது. Denzel Washington போல் இருக்கும் இவரது கம்பீரமான உடல் மொழி எனக்கும் மிகவும் பிடிக்கும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு எடுக்க பட்ட இந்த படத்தின் பிரம்மாண்டம் மலைக்கவைக்கிறது. கிராபிக்ஸ் இல்லாமலே ரோம சாம்ராஜியத்தை எப்படி குப்ரிக் உருவாக்கினார் என்று தெரியவில்லை. போர் காட்சிகளில் பத்தாயிரம் பேருக்கு மேல் பயன்படுத்தியிருகிறார். கலப்படமற்ற பிரம்மாண்டம் அது. தொப்பையில், ரயிலில் படம் வரைவதை மட்டுமே பிரமாண்டமாக கருதிகொண்டிருபது நாம் பெற்ற சாபம். போர்கள காட்சிகள் அந்த முப்பது வயது இளைஞனின் ஆளுமையை காட்டுகிறது. படத்தின் அந்த இறுதி காட்சி Classic. இந்த படத்தை பார்காத நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள். எவ்வளவு மட்டமான ரசனை கொண்டவனாக இருந்தாலும் படத்தின் ஏதோ ஒரு காட்சி அவனை கவர்ந்து விடும் என்பது உண்மை. ஸ்டான்லி குப்ரிக்கை பற்றி ஒரு புதிய விசயத்தை போன வாரம் தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக இருந்தது. அதை பற்றி வரும் பதிவில் பார்போம்.