ADD THE SLIDER CODE HERE

Pages

Thursday, April 26, 2012

எனதருமை டால்ஸ்டாய்

"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ஆபாசமாக இசை, நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் எழுதும் இலக்கியவாதிகள் எல்லோரும் போலிகள். சமுதாயத்தின் விஷவிதைகள் நோய்கிருமிகள்" - இவை உலக புகழ் பெற்ற ரஷ்யா எழுத்தாளர் Leo Tolstoy ன் வரிகள்.

மு.கு: இந்த பதிவில் நான் எழுதிய அனைத்தும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலின் தலைப்புதான் இந்த பதிவுக்கும்.


ஒரு திரைப்படம் உருவாகும் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள எனக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. ஆனால் புத்தகங்கள், நாவல், கவிதை நூல் உருவாகும் காரணம் பற்றி அறிய இதுவரை முயற்சிததில்லை. எதேர்ச்சையாக புத்துயிர்ப்பு(Resurrection) என்ற நாவல் பிறந்த காரணம் பற்றி தெரிய வந்த போது மிக மிக ஆச்சர்யம் அடைந்தேன். உலகில் இதுவரை வெளியான எந்த நாவலுக்கும் இல்லாத பின்புலம் இந்த நாவல் பெற்றிருக்கிறது என அடித்து சொல்லலாம். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக எழுதபட்ட நாவல் இது. அந்த இனத்தை சேர்ந்த 47000 மக்களின் வாழ்க்கை புத்துயிர்ப்பு எழுதிய டால்ஸ்டாய்யின் கைகளில் இருந்தது. யார் அந்த மக்கள்? என்ன பிரச்சனை அவர்கள் சந்தித்தார்கள்? டால்ஸ்டாய் அவர்களுக்கு செய்தது என்ன? பார்ப்போம்.

Doukhobors இன மக்கள்:

டுகொபார்ஸ் என்பது ரஷ்யாவில் இருந்த ஒரு மத பிரிவு. அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானதாக இருந்திருக்கிறது. காந்தியடிகள் கூட அவர்களின் வாழ்வியலை பின்பற்றினார் என்று சொல்லபடுகிறது. அதை சேர்ந்த மக்கள் எத்தகைய ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 • சைவ உணவு மட்டுமே உண்பார்கள். பால் அருந்துவது கூட பாவம். அது கன்றுகளுக்கு உரியது என தவிர்த்துவிட்டனர்.
 • ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்களால் முடிந்த வேலையை செய்தே ஆகவேண்டும். வயதானவர்களை ஊர் பராமரிக்கும்.
 • தங்களை யார் தாக்கினாலும், எவ்வளவு வன்முறை செய்தாலும் திருப்பி அடிக்க மாட்டார்கள். அகிம்சை தான் அவர்களை பொறுத்தவரை தெய்வம்.
 • புகையிலை, மது பழக்கம் கிடையாது. உணவை விற்பது பாவம்.
 • அடிப்படை வசதிகளுக்கு மேல் உணவோ, உடைமையோ வைத்துகொள்ள மாட்டார்கள். பணத்தின் மேல் பற்று கிடையாது.
 • மிக முக்கியம். அவர்கள் ராணுவ சேவையை வெறுத்தார்கள்.

மேல கூறியவற்றில் கடைசி வரிதான் அவர்களை சோதித்தது. கம்யூனிஸ்ட்களுக்கு முன்பு ரஷ்யாவை ஆண்ட ஜாரின் கொடுங்கோல் ஆட்சி, டுகொபார்ஸ் மக்களை கட்டாய ராணுவ பணி செய்ய உத்தரவிட்டது. கருணை மிக்க அந்த மக்களிடம் ஆயுதம் எடுத்து, கொலை செய்ய சொன்னால் கேட்பார்களா. மறுத்துவிட்டார்கள். அரசு கொதித்தது. ராணுவ பணி செய்ய மறுத்தவர்களை சிறையில் தள்ளியது. சைபீரிய சிறையில் நிரப்பி கொடுமைபடுத்தபட்டனர். அவர்கள் மனம் தளரவில்லை. எந்த நேரத்திலும் திருப்பி தாக்காமல் அமைதியுடன் ஏற்று கொண்டனர். இங்கு தான் டால்ஸ்டாய் எனும் மீட்பர் இவர்களுக்கு கரம் கொடுக்கிறார்.


டால்ஸ்டாய் செய்தது என்ன:

டுகொபார்ஸ் மக்களின் இந்த நிலையை பற்றி கேள்வி பட்ட டால்ஸ்டாய் அவர்களுக்கு ஆதரவாக பேச துவங்கினார். உலக நாடுகளின் கவனத்திற்கும், பத்திரிகைகளின் கண்களுக்கும் இந்த பிரச்னையை கொண்டு சென்றார். அரசு இறங்கி வந்து 47000 டுகொபார்ஸ் மக்களையும் நாட்டை விட்டு விரட்ட முடிவு செய்தது. கனடா அவர்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது . ஆனால் ரஷ்யாவில் இருந்து கனடாவிற்கு கடல் வழி பயணம் செய்ய ஆறாயிரம் மைல் பயணம் செய்ய வேண்டும். அதற்கான செலவை ரஷ்யா தராது என்று சொல்லிவிட்டது. அதனால் டால்ஸ்டாய் தன் நாவல் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் இந்த மக்களின் பயணத்திற்கு செலவிட முடிவு செய்தார். அப்படி அவர் எழுதிய நாவல் தான் புத்துயிர்ப்பு. ஒரு பத்திரிக்கையில் தொடராக இந்த நாவலை எழுதினார். இதன் ராயல்டி தொகை எல்லாமே டுகொபார்ஸ் மக்களுக்கு கொடுக்கபட்டது. முதலில் கிடைத்த ராயல்டி தொகையை வைத்து 2300 அகதிகள் கப்பல் மூலம் கனடா அனுப்பபட்டனர். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் உணவு உறக்கம் எல்லாம் மறந்து எழுதி இருக்கிறார். இதை எழுதும் பொது இவருக்கு வயது 78 என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இடையில் இவர் உடல் நலம் குறைந்து அவதி பட்டாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. ஒரு தேவதூதன் போல் தங்களை காக்க வந்த இவரின் உடல் நலம் பெற டுகொபர்ஸ் மக்கள் இறைவனை வேண்டினர். ஒரு வருடம் கழித்து நாவல் முடிவுற்றது. மக்கள் கனடா போய் சேர்ந்தனர்.

டால்ஸ்டாய் தன் ஆயுள் முழுதும் சக மனிதனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என கூறியே வாழ்ந்துவந்திருகிறார். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றை படித்தேன். அருமை. அவரது 'போரும் அமைதியும்' நூல் இன்று வரை உலகின் சிறந்த நாவலாக கருதபடுகிறது.


The Last Station:

இந்த புத்தகம் படித்து முடித்த உடனேயே டால்ஸ்டாய் பற்றிய படம் ஒன்று வந்ததை தெரிந்து கொண்டேன். The Last Station என்ற அந்த படம் 2009 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. பேராசை கொண்ட தன் மனைவியால் டால்ஸ்டாய்யின் கடைசி நாட்கள் எவ்வளவு வேதனையாக இருந்தது என்று இந்த படம் கூறுகிறது. தனது படைப்புகள் அனைத்தும் தான் இறந்த பின் மக்களுக்கு பயன்பட வேண்டும் என நினைக்கும் டால்ஸ்டாய் அதன் காப்புரிமையை அரசுக்கு அளிக்க முடிவெடுக்கிறார். ஆனால் அந்த காப்புரிமை தனக்கே வேண்டும் என்றும், அதன் மூலம் நிறைய லாபம் வரும் என்றும் கூறுகிறார் அவர் மனைவி. இதனால் தள்ளாத வயதில் வீட்டை விட்டு ஓடி போகிறார் டால்ஸ்டாய். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மனைவி பணத்தாசை கொண்டிருந்தாலும் டால்ஸ்டாய் மேல் கடைசி வரை மிகுந்த அன்பு கொண்டவராய் வாழ்த்திருக்கிறார். நண்பர்கள் இந்த படத்தையும், அதற்கு முன் இந்த புத்தகத்தையும் படித்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன். ஒரு நல்ல மனிதனை பற்றிய பதிவு போட்டதில் எனக்கு திருப்தி. இவரை பற்றிய வேறு ஏதேனும் செய்தி இருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

10 comments:

 1. அருமை நண்பா...
  மக்களுக்காக எழுதியவனின் மகத்துவத்தை சொன்ன இப்பதிவு...
  பதிவுலகின் பொக்கிஷம் ...

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி.. எஸ்.ரா நூலில் இருந்து அப்படியே தந்திருக்கிறேன்..

  ReplyDelete
 3. மனதை நெகிழ வைக்கும் உண்மைக் கதை நண்பா! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. புத்தகம் வாசிப்பேனோ தெரியாது.. படத்தைப் பார்த்துவிடுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. எனதருமை டால்ஸ்டாய் நூலை படித்து விடுங்கள்.. 100 ரூபாய் தான்.. செக்கோவ், தஸ்தயேவ்ஸ்கி என பல எழுத்தாளர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

   Delete
 4. புக் , படம் ரெண்டுமே பாத்ததில்ல... பாக்கணும் படிக்கணும்..

  நீங்க ஒரு இலக்கியவாதியா மாறிட்டு வறீங்களோ

  ReplyDelete
  Replies
  1. நம்ம கொழந்தைக்கு போட்டியா ஒரு இலக்கியவாதி வந்தாச்சு.

   Delete
  2. ஒரேரேரேரே ஒருருருரு பாஷா தான் ஊஊஊஊருக்கெல்லாம்......

   Delete
 5. பாஸ்,
  எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப டிஸ்டன்ஸ். படம் மட்டும் கண்டிப்பாய் பார்கிறேன்... நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.. Gmail la Ping பண்ணாலும் ரிப்ளை இல்ல..

   Delete
 6. முன்னமே வந்து படித்தேன் நண்பா..படத்தை டவுன்லோடு லிங்க் எடுத்துவிட்டேன்..இனி பார்த்துடுவேன்..லேட்டாக வந்தமைக்கு மன்னிக்கவும், பதிவு அருமை.டால்ஸ்டாய் பற்றி எதுவுமே எனக்கு தெரியாதுங்கோ..மிக்க நன்றி.

  ReplyDelete